உலகம் செய்திகள்

ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கா எங்களுக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும்: தலிபான்கள்

அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலில் உயிரிழப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீனத் தொலைக்காட்சிக்கு சபிஹுல்லா அளித்த பேட்டியில், “நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலில் தற்கொலைப்படை தீவிரவாதியைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியானார்கள்.

உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் எந்த முன் அறிவிப்பையும் அமெரிக்கா எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், அது எங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்னிச்சையான தாக்குதலாக அது இருக்கக் கூடாது” என்றார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்த இருந்தார்.

இதனைத் தொடர்ந்தே நாங்கள் தாக்குதல் நடத்தினோம் என்றும், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்களா? என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் கெடு விடுத்துள்ளனர்.