உலகம் செய்திகள்

தாலிபான்களுக்கு எச்சரிக்கை – அமெரிக்க படைகளை காபுலுக்கு அனுப்பும் அதிபர் பிடன்.

காபுல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்கு 5000 அமெரிக்க படைகளை அனுப்பும் முடிவை எடுத்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன். அங்கு இருக்கும் முக்கியஸ்தர்கள், தலைவர்கள், அமெரிக்க அதிகாரிகள் உள்ளிட்ட 30000 பேரை வெளியேற்றுவதற்காக இந்த கூடுதல் படைகளை அதிபர் பிடன் அனுப்பி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக வென்று வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறி ஒரு வருடத்திற்குள் ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றலாம் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறுவதற்கு முன்பாகவே தலிபான்கள் அங்கு வெற்றி பெற்று வருகிறது.

தாலிபான் படைகள் இன்று காலை ஜலாலாபாத் என்ற முக்கியமான நகரத்தை கைப்பற்றி உள்ளது. ஆப்கான் படைகளின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் எளிதாக தாலிபான் படைகள் ஜலாலாபாத்தை கைப்பற்றியது. இதன் மூலம் காபுல் தவிர அனைத்து முக்கிய நகரங்களும் தாலிபான் வசம் வந்துள்ளது.

இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை பிடன் வெளியேற்றிய விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அவசர அவசரமாக படைகளை வெளியேற்றியது, ஆப்கானிஸ்தானில் விட்டுவிட்டு வந்த ஆயுதங்களை முறையாக ஆப்கான் படைகளுக்கு கொடுக்காமல் ஆங்காங்கே அப்படியே போட்டுவிட்டது வந்ததும் என்று பல விஷயங்கள் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

முறையான திட்டமின்றி படைகளை வெளியேற்றியது தாலிபான்களுக்கு சாதகமாக முடிந்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை எளிதாக கைப்பற்றியதற்கு அமெரிக்க படைகள் வெளியேறிய விதமும் முக்கிய காரணம் ஆகியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தொடங்கி பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் வரை பிடனின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

ஆனால் பிடன் தொடக்கத்தில் இருந்தே தான் படைகளை வெளியேற்றிய விதம் சரிதான் என்றே பேசி வருகிறார். ஆப்கானிஸ்தான் அரசிடம் 2 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர். தாலிபான்களிடம் 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்.

உலகில் இருக்கும் எந்த ராணுவத்தையும் போல ஆப்கானிஸ்தான் ராணுவமும் மிகவும் வலிமை வாய்ந்தது, முறையாக பயிற்சி பெற்றது. ஆப்கானிஸ்தான் அரசிடம் போதுமான ஆயுதங்கள் உள்ளன. தாலிபான்களால் ஆப்கானிஸ்தான் அரசை வீழ்த்த முடியாது என்று பல மேடைகளில் பிடன் தெரிவித்து வருகிறார்

பிடன் ஒரு பக்கம் ஆப்கான் ராணுவம் குறித்து நம்பிக்கையாக பேசினாலும் கூட, இன்னொரு பக்கம் ஆப்கான் படைகள் தாலிபான்களிடம் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வென்றுவிட்டது. 95 சதவிகித நாடு தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

திறமையான ராணுவம் என்று பிடன் குறிப்பிட்ட அதே ஆப்கானிஸ்தான் ராணுவம் பல மாகாணங்களில் எந்த விதமான மோதலும் இல்லாமல் தாலிபான்களிடம் சரண்டர் அடைந்து வருகிறது. இதனால் கைப்பற்றப்பட்ட இடங்கள் போக தற்போது காபுல் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த காபுல் நகரமும் எப்போது வேண்டுமானாலும் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான் தாலிபான்கள் மொத்த நாட்டையும் கைப்பற்றும் முன் அங்கிருந்து ஆப்கான் அரசின் தலைவர்கள், அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தவர்கள், அமெரிக்காவுடன் சேர்ந்து பணியாற்றிய பொதுமக்கள், பிரபலங்கள், அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளது. மொத்தம் இப்படி 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை வெளியேற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்க படைகள் உள்ளது.

அடுத்த 15 நாட்களுக்குள் அமெரிக்க படைகள் இவர்களை மொத்தமாக வெளியேற்ற வேண்டும். ஏனென்றால் ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும். அதற்கு முன் இவர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

இதனால் தற்போது கூடுதல் படைகளை காபுலுக்கு அமெரிக்கா அனுப்பி உள்ளது. 5000 வீரர்களை அமெரிக்க அதிபர் பிடன் காபுலுக்கு அனுப்பி உள்ளார். முன்பு 3000 வீரர்களை அனுப்புவதாக திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது 5000 வீரர்களை பிடன் அனுப்பி உள்ளார்.

இவர்களின் பணி ஆப்கானிஸ்தானில் அடுத்த 15 நாட்களுக்கு காபுல் வீழாமல் காக்க வேண்டும். அதோடு அங்கிருக்கும் 30 ஆயிரம் பேரை வெளியேற்ற வேண்டும். ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானியை வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரை வெளியேற்ற உதவவும், தூதரக பணியாளர்களை அடுத்த 15 நாட்களுக்கு காக்கவும் இந்த கூடுதல் படைகள் அனுப்பப்படுகின்றன.

ஆனால் இந்த படைகள் தாலிபான்களுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது. முழுக்க முழுக்க பாதுகாப்பு பணிகளை மட்டுமே மேற்கொண்டு, மக்களை வெளியேற்றுவதில் கவனம் செலுத்தும்.

கண் கெட்ட பின்பே சூரிய உதயம் என்பது போல காபுல் மொத்தமாக வீழ போகும் கடைசி நொடியில் பிடன் இந்த கூடுதல் படைகளை அனுப்பி உள்ளார். எந்த விதமான முறையான திட்டமிடலும் இல்லாமல் பிடன் செயல்பட்டதால் இப்போது கடைசி நொடியில் கூடுதல் படைகளை அனுப்பி, மக்களை வெளியேற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிடன் அளித்துள்ள பேட்டியில், இந்த கூடுதல் படைகள் அமெரிக்க அதிகாரிகள், சர்வதேச அதிகாரிகள், அமெரிக்காவுடன் பணியாற்றிய ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் தலைவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இவர்களுக்கு எதிராக தாலிபான்கள் செயல்பட கூடாது. அங்கே இருக்கும் அமெரிக்க படைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாலிபான்கள் செயல்பட்டால் உடனடியாக அமெரிக்கா இதற்கு தக்க ராணுவ பதிலடியை கொடுக்கும்.

தாலிபான்கள் ஒப்பந்தத்தின்படி நடக்க வேண்டும் என்று அதிபர் பிடன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிடன் என்னதான் இப்படி எச்சரிக்கை விடுத்து இருந்தாலும் தாலிபான்களுக்கும் அமெரிக்க படைகளுக்கும் இனி மோதல் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றுதான் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.