செய்திகள் தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள் மற்றும் பூங்காக்கள் திறக்க அனுமதி – பொதுமக்கள் மகிழ்ச்சி

கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தியேட்டர்கள், பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு அதாவது, செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்டி, ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு பின்னர் தியேட்டர்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல்குளங்கள் (விளையாட்டு பயிற்சிக்கு மட்டும்), தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

இதுவரை கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதையொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் அனுதிக்கப்படாமல் இருந்த கடற்கரைகள் மீண்டும் இன்று முதல் அனுமதிக்கப்படுகின்றன.

அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.