உலகம் செய்திகள்

தாலிபான்கள் எச்சரிக்கை – இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை வேட்டையாடுவோம்

இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை தேடிவருவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளது அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. இதில் மிக முக்கியமானது ஹக்கானி குரூப்.

ஹக்கானி குரூப் வசம்தான் காபூல் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹக்கானி நெட்வொர்க் என்கிற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களை இந்த குழு நடத்தி வந்தது. அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்ட இயக்கமும் இது.

அல்கொய்தா இயக்கத்தை உருவாக்கிய ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் ஜலாலுதீன் ஹக்கானி. 1996-2001-ல் தாலிபான்கள் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார் ஜலாலுதீன் ஹக்கானி.

அவரது சகோதரர் பெயர் ஹாலி ஹக்கானி. இவரது பெயரில்தான் காலி ஹக்கானி படையணியை ஹக்கானி குழு உருவாக்கி உள்ளது.

இந்த ஹாலி ஹக்கானி குழுவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான நவாஸுதீன் ஹக்கானி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில், கடந்த காலங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருடனும் இந்தியாவின் ரா (வெளிநாட்டு கொள்கை வகுப்பு பிரிவு) அமைப்புடனும் தொடர்பில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை தேடி வருகிறோம்.

இந்த தேடுதல் நடவடிக்கையை அல் நிஷா என்ற பிரிவு மேற்கொண்டு வருகிறது என்றார்.
ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களிலும் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் தங்களுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கான் நாட்டவர் தொடர்பான விவரங்களை அமெரிக்கா வைத்திருந்தது.

அந்த விவரங்கள் இப்போது தாலிபான்கள் வசம் சிக்கியுள்ளது. இந்த பட்டியலில் 7,000 பேர் விவரங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். எஞ்சியவர்களை அடையாளம் காண்பதில் பாகிஸ்தானும் உதவி செய்ய உள்ளதாம். இதனையும் நவாஸுதீன் ஹக்கானி தமது பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

தாலிபான்கள் பிடியில் காபூல் சிக்கியது முதலே பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள், ஆப்கான் நாட்டவர் காபூல் விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்து நாட்டைவிட்டு தப்பி வருகின்றனர்.

அமெரிக்கா படைகள் வரும் 31-ந் தேதிக்குள் தங்களது நாட்டைவிட்டு வெளியேறாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என ஏற்கனவே தாலிபான்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பயங்கரவாதிகள் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தி சுமார் 200 பேரை படுகொலை செய்தனர்.

அடுத்த 24-36 மணிநேரத்தில் இதேபோல் பயங்கரவாத தாக்க்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் தாலிபான்களும் தங்களது தேடுதல் நடவடிக்கை என்ற பெயரிலான நடவடிக்கையை தொடங்கி இருப்பது ஆப்கான் நிலைமை படுமோசமடைந்து வருவதையே வெளிப்படுத்துகிறது.