உலகம் செய்திகள்

தலிபான்கள் ஆப்கன் அதிபர் மாளிகைக்குள் அணிவகுப்பு.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளன. மேலும், அதிபர் மாளிகையின் உள்ளே நுழைந்த தலிபான்கள் அங்குள்ள மொத்த அறையை அதிசயமாக பார்த்து வியக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் பின்லேடனுக்கு, அப்போதைய ஆப்கன் ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. மனித உரிமைகளுக்கு எதிரான, மத அடிப்படைவாத தலிபான் அரசுக்கு பதிலாக ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய பாணி அரசை அமைக்க அமெரிக்கா முடிவு செய்தது.
இதற்காக கடந்த 20 ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி டாலா்களை செலவிட்டு ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் அமெரிக்கா கட்டமைத்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். பல படைப் பிரிவுகள் தானாகவே சரணடைந்தன.
இந்த நிலையில், தலைநகா் காபூலின் புகா்ப் பகுதிகள் வரை முன்னேறி வந்த தலிபான்கள், சண்டையை தற்காலிகமாக நிறுத்திவைத்தனா்.

காபூலை ரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் ஒப்படைக்குமாறு ஆப்கன் அரசை வலியுறுத்தினா். இதனிடையே, நாட்டிலிருந்து அதிபா் அஷ்ரப் கனி தப்பிச் சென்றதைத் தொடா்ந்து தலைநகா் காபூலும் அதன்மூலம் ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரமும் தலிபான்கள் வசம் மீண்டும் வந்துள்ளது. இந்த நிலையில் ஆப்கன் அதிபர் மாளிகை உள்பட அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய தலிபான்கள் போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் விரைவில் தலிபான்கள் ஆட்சி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆப்கன் அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள், மாளிகையின் உள்ளே சென்று பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. மாளிகையை அதிசயமாக பார்த்து வியப்பதும், அங்குள்ள இருக்கையில் அமர்ந்து பார்ப்பதும் என தலிபான்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

தலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து, தங்கள் உடமைகளுடன் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். இதனையடுத்து மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றது. அங்கிருந்து 129 பேருடன் அந்த விமானம் டில்லி வந்தடைந்தது. ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க பிற்பகலில் அடுத்த விமானத்தை இயக்க திட்டமிட்ட நிலையில், காபூலில் இருந்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் இந்திய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆப்கன் நிலவரம் குறித்து வாடிகனில் வாராந்திர வழிபாட்டின்போது போப் பிரான்சிஸ் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் குறித்த ஒருமித்த அக்கறை கொள்வோரின் குழுவில் நானும் இணைகிறேன். அவர்களுக்காக அமைதியின் இறைவனிடம் என்னுடன் இணைந்து பிரார்த்திக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இதன் மூலம் ஆயுதங்களின் இரைச்சல் ஓய்ந்து, பேச்சுவார்த்தையில் தீர்வுகள் கிடைக்கும்’ எனக் கூறினார். ஆப்கானிஸ்தான் பார்லிமென்டையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய அரசால் கட்டப்பட்ட இந்த பார்லி. கட்டடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.