செய்திகள் தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த 12 மணி நேர ரெய்டு நிறைவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 12 மணி நேரமாக நடத்திய சோதனை நிறைவு பெற்றது.

சோதனை முடிவில் கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சம், வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடிக்கான ஆவணங்கள் மற்றும் டெண்டர் தொடர்பான ஆவணங்கள், கணினி மற்றும் ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அப்போது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது.

அரசின் ஒப்பந்த பணிகளை பெற்றுத் தருவதாக, 1.20 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் நேற்று போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் வசிக்கும் மாஜி அமைச்சர் வேலுமணி வீடு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் வேலுமணி மனைவியின் சகோதரர் சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடந்தது.

வேலுமணி வீட்டில் 10 பேர் கொண்ட போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருங்கிய நபர் வீடுகளில் சோதனை நடக்கிறது. கோவையில் 35, சென்னையில் 15 இடங்களிலும், காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் வேலுமணிக்கு தொடர்புடைய தலா ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.

சென்னையில் எம்எல்ஏ., விடுதியில் உள்ள அறையிலும் சோதனை நடத்தினர். அங்கிருந்த வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில், வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், சந்திரசேகர், முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, கு.ராஜன் உள்ளிட்ட 7 பேர் மற்றும் 10 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திமுகவின் ஆர்எஸ்பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கடத்தூரில் ஏஸ் டெக் மெசினரி என்னும் தனியார் நிறுவனம் சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசுக்கு பல்வேறு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனமாகவும் உள்ளது.

சமீபத்தில் சுகாதாரத் துறைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாரித்து சப்ளை செய்துள்ளனர். இந்த நிறுவனம் விதிமுறைகளை மீறி அரசின் பல ஆர்டர்களை பெற்று சப்ளை செய்து வந்தது. இந்நிறுவனம் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி நிறுவனம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து காலை 7 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் 5 போலீசார் இந்நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி தலைவரையும் வரவைத்து அவரிடமும் தொழிற்சாலை குறித்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை நடக்கும் இடத்திற்கு முன்பு மேட்டுப்பாளையம் போலீஸ் டிஎஸ்பி ஜெய்சிங் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்திற்கு முன்னதாக கயிறு கட்டி தடை ஏற்படுத்தி வெளி நபர்களை அனுமதிக்காமல் பத்திரிகையாளர்களையும் 50 மீட்டர் தள்ளி இருக்கும் படி போலீஸ் டிஎஸ்பி ஜெய்சிங் தெரிவித்தார்.

வேலுமணி வீட்டில் சோதனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, அவரது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் பெருமளவு குவிந்து போராட்டம். அவர்கள் வீட்டு வாசலின் முன்பு திரண்டு கோஷம் எழுப்பி வந்தனர். இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு அளிக்கப்பட்டது.

விருதுநகர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ உள்பட 11 பேர் கொண்ட குழு 6 மணி நேரத்துக்கும் மேலாக அன்னூர் கடத்தூரில் உள்ள ஏஸ். டெக். நிறுவனத்தில் சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

அதேபோல், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேயுள்ள காளியாபுரம் பகுதியில், எஸ்.பி வேலுமணியின் சகோதரர் அன்பரசனின், நெருங்கிய நண்பர் திருமலைசாமி என்பவரது மளிகைக் கடை மற்றும் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

சென்னையில் உள்ள சட்டமன்ற விடுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் நடத்தப்பட்ட விசாரணை 12 மணி நேரத்திற்கு பின் நிறைவடைந்தது. அதன்பிறகு 3 வாகனங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் மற்றும் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.