உலகம் செய்திகள்

இந்திய வீரர் வினோத்குமாரின் பதக்கம் பறிப்பு – பாரா ஒலிம்பிக்.

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டியில், வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர், வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பாரா ஒலிம்பிக்கில் இந்தியா அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வந்தது. இதில், இந்திய வீரர் வினோத் குமாரின் வெண்கலப்பதக்கமும் அடங்கும்.

இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்வளவு அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.

பாரா ஒலிம்பிக்கில் ஆறாவது நாளான நேற்று (ஆக.29) தான், இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார்.

ஆனால், இறுதிப் போட்டியில் சீனாவின் உலகின் நம்பர்.1 வீராங்கனை ஸோ யிங்-குடன் மோதிய பவினா படேல் தோல்வியைத் தழுவ, தங்கப்பதக்கம் மிஸ்ஸானது. எனினும், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுதான்.

இதன் பிறகு, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (டி47) போட்டியில், இந்திய வீரர் நிஷாத் குமார் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். நிஷாத் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டினார்.

அமெரிக்க வீரர் டவுன்சென்ட் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் வைஸ் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ராம் பால் 1.94 மீட்டர் உயரம் தாண்டி 5-வது இடம் பிடித்தார்.

இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா இன்று தங்கம் வென்று சாதித்தார். பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை 19 வயதான அவனி லெகாரா பெற்றார்.

அவனி 249.6 புள்ளிகளுடன் உலக சாதனையை சமன் செய்தார். இதுபோல் வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார். ஒரே நாளில் இந்தியாவுக்கு இன்று 2 பதக்கம் கிடைத்தது. சீனாவின் கியூப்பிங் ஜாங் 248.9 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், உக்ரைனின் இரினா ஷ்செட்னிக் வெண்கலத்தையும் வென்றனர்.

இதையடுத்து, இன்று ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியாவின் லெஜண்ட் வீரர் தேவேந்திர ஜஜாரியா 64.35 தூரம் வீசி வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் 64.01 தூரம் வீசி வெண்கலமும் வென்றனர்.

அதேபோல், ஆண்களுக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியாவின் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கம் வென்றார். பங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தி உள்ளார் யோகேஷ் கத்துனியா. வட்டு எறிதல் (F56) போட்டியில் 44.38 மீ. தூரம் வீசி அவர் வெள்ளி வென்றார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற இருபத்தி நான்கு வயதே ஆன கத்துனியா, இப்போது தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் நேற்று ஆண்கள் வட்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் 3-வது இடம் பிடித்ததால், வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

வினோத் குமார் இறுதிச்சுற்றில் 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இப்போட்டியில், போலந்து வீரர் கோஸ்விச் (20.02 மீட்டர்) தங்கப்பதக்கமும், குரோஷிய வீரர் வெலிமிர் சாண்டர் (19.98 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

இருப்பினும் அவரது உடல் திறனை வகைப்படுத்தியதில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதனையடுத்து, அவரது வெற்றியை ஆய்வு செய்ய உள்ளதாகவும், பதக்கம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று டோக்கியோ பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்தது.

இதனால், வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமார் வெண்கலம் திரும்பப் பெறப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் வகைப்பாடு மதிப்பீட்டில் தகுதியற்றவர் என்று அறிவித்ததால் பாராலிம்பிக் ஆண்கள் F52 வட்டு எறிதலில் வினோத் குமார் வெண்கலப் பதக்கத்தை இழந்தார்.