உலகம் செய்திகள்

காபுல் நகரின் தற்போதைய நிலை சாட்டிலைட் புகைப்படங்கள்

விமான நிலைய வளாகத்திலும், விமான ஓடுபாதையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்தனர். இது திரைப்படங்களில் வரும் காட்சிகளையும் மிஞ்சுவதாக இருந்தது.

தலிபான்களிடமிருந்து தப்பிப்பதற்காக காபுலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஒரு விமானத்தில் எப்படியாவது ஏறி தப்பித்து எங்காவது சென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில்,

ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் விமான நிலையத்தில் குவிந்ததும், விமானங்களில் முண்டியடித்துக் கொண்டு ஏறியதும், அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையும், ஓடு பாதையில் சென்ற விமானத்தின் கூடவே ஓடி ரயில்களில் ஏறுவது போல விமானத்தினுடைய சக்கரங்களில் ஏறி சென்றதையும்,

பறந்து சென்று கொண்டிருந்த விமானத்தில் சக்கரங்களில் தங்களை கட்டிக் கொண்டவர்கள் நடுவானில் கீழே விழுந்து பலியானதையும் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

இது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்கள் காபுல் நகரை கைப்பற்றிய பின்னர் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் நாட்டின் பிடியும் தலிபான்கள் வசம் வந்தது. இதையடுத்து அதிபராக இருந்த அஷ்ரப் கனி விமானம் மூலம் ஓமனுக்கு தப்பிச் சென்றார்.

காபுலில் இருந்து எப்படியாவது தப்பிக்க நினைத்த மக்கள் தங்களுக்கென இருக்கும் ஒரே வழியாக கருதியது விமான நிலையத்தை மட்டுமே. அங்கிருந்து ஏதேனும் ஒரு விமானத்தில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு அகதியாக சென்றுவிடலாம் என பலரும் அங்கு நேற்று முதல் குவியத் தொடங்கினர்.

இதன் காரணமாக காபுல் விமான நிலையத்துக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிலர் கார்களை சாவியுடன் விட்டுவிட்டு நடந்தே விமான நிலையத்துக்கு சென்றனர். மக்கள் பெரும் கூட்டமாக சுவர்களை ஏறி குதித்து கூட விமான நிலையத்துக்குள் புகுந்து தப்பிக்க நினைத்தனர்.
இதன் காரணமாக விமான நிலைய வளாகத்திலும், விமான ஓடுபாதையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்தனர். இது திரைப்படங்களில் வரும் காட்சிகளையும் மிஞ்சுவதாக இருந்தது.
தற்போது காபுல் நகர விமான நிலையத்தின் சாட்டிலைட் புகைப்படங்களை மக்சார் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் காபுல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்திருந்ததை பார்க்க முடிகிறது. அதிக எண்ணிக்கையிலானவர்கள் விமான ஓடுபாதையில் இருந்தனர். ஆப்கானிஸ்தானி அவலங்களை உணர்த்தும் வகையில் இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.