உலகம் செய்திகள்

அதிர்ச்சி வீடியோக்கள் – காபுலில் இருந்து விமானத்தில் தொங்கியபடி பயணித்தவர்கள் 3 நபர்கள் கீழே விழுந்து பலி

விமானத்தில் பயணித்த மூவர் அருகே இருந்த வீடுகளின் மீது விழுந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்திருக்கின்றனர். இந்த வீடியோ கடும் அதிர்ச்சியையும் காபுலில் நிலவும் அசாதாரண சூழலையும் உணர்த்துவதாகவும் உள்ளது.

தலிபான்களிடம் இருந்து தப்பிப்பதற்காக விமானத்தில் தொங்கியபடி பயணம் செய்த மூன்று பேர் கீழே விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்நாட்டு போராட்டக் குழுவான தலிபான்களின் ஆக்ரோஷத்துக்கு ஈடு கொடுக்க முடியாத ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் கடந்த சில தினங்களாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்தன. காந்தகார் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி அதிர்ச்சியை தந்த தலிபான்கள், நேற்று தலைநகரை காபுலையும் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் இனி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என அழைக்கப்படும் என்ற அறிவிப்பை தலிபான்கள் வெளியிட்டனர்.

அந்நாட்டில் அதிபராக இருந்த அஷ்ரஃப் கானி, தலிபான்கள் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக தஜிகிஸ்தானுக்கு விமானம் மூலம் தப்பிச் சென்றுவிட்டார். அதிபரும், அரசு அதிகாரிகளும் தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்துவிட்டனர்.

காபுலில் தான் பல நாடுகளின் தூதரகங்களும், சர்வதேச விமான நிலையமும் இருக்கின்றன. தலிபான்கள் மீதான அச்சம் காரணமாக ஆப்கன் மக்கள் காபூல் விமானநிலையத்தில் குவிந்து கிடக்கின்றனர். ரயிலில் ஏறுவது போல் விமானத்தில் அடித்துப்பிடித்துக்கொண்டு மக்கள் ஏறும் காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் திரண்ட ஆப்கானிஸ்தானியர்களை கட்டுப்படுத்த அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகிய ஒரு வீடியோவில் காபுல் நகரத்தில் இருந்து இன்று புறப்பட்ட பெரிய விமானம் ஒன்றில் எப்படியாவது காபுலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நினைப்புடன் விமானத்தின் வீல்களை பிடித்துக் கொண்டு பயணித்த மூன்று பேர், நடுவானில் விமானத்தில் இருந்து கீழே விழுந்து பலியாகியுள்ளனர்.

இதனை அங்கிருந்த மக்கள் பார்த்துள்ளனர். விமானத்தில் பயணித்த மூவர் அருகே இருந்த வீடுகளின் மீது விழுந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்திருக்கின்றனர். இந்த வீடியோ கடும் அதிர்ச்சியையும் காபுலில் நிலவும் அசாதாரண சூழலையும் உணர்த்துவதாகவும் உள்ளது.

மற்றொரு வீடியோவில், காபுல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானப் படை விமானம் ஒன்று ரன்வேயில் சென்று கொண்டிருக்கும் போது ஆயிரக்கணக்கான மக்கள் அந்த விமானத்தை சூழ்ந்து கொண்டும், அதனுடன் ஓடியவாறும், சிலர் அந்த விமானத்தின் வீல்களில் நின்று கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.