உலகம் செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா 3வது அலை அதி தீவிரம் – அமெரிக்காவில் ஒரே நாளில் 1.76 லட்சம் பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 6,72,658 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,99,14,660 பேராக அதிகரித்துள்ளது.

உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல் அலையில் தொடங்கிய இந்த கொடுந்தொற்று நான்காவது அலை வரை மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதித்து

உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா வகை கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன. ஆல்பா, பீட்டா, கப்பா என பலவகையான கொரோனாக்கள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன.

கடந்த சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா, தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா ஒருபக்கம் பரவினாலும் மறுபக்கம் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை தருகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 541,753 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19,65,49,519பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 10,500 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 45,55,669 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,542 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஒரு மாதகாலமாகவே கொரோனா தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. அங்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 176,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவால் 4,05,10,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 3,11,89,511 பேர் மீண்டுள்ளனர். அமெரிக்கா முழுவதும் 86,58,175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 1,542 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,62,830 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,02,345 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 45,482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் நாட்டில் மொத்தம் 2,08,30,712 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 5,82,004 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். ரஷ்யா, பிரிட்டன் நாடுகளில் 68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 6 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை நெருங்கி உள்ளது.

துருக்கியில் 64 லட்சம் பேரும், ஈரான், அர்ஜென்டைனா, கொலம்பியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராகி வருகின்றன.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பான் தற்போது 26வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 20,031 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 82 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.