உலகம் செய்திகள்

பொதுமக்கள் உயிர் இறந்ததற்க்கு அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் தான் காரணம் – தலிபான்கள் குற்றச்சாட்டு

காபூல்: ‘அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலால் தான் காபூலில் நேற்று பொது மக்கள் உயிரிழந்தனர்’ என, தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார்.

சீனத் தொலைக்காட்சிக்கு இன்று (ஆக., 30) தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது:

காபூலில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதியைக் குறிவைத்து, அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியாகினர்.

உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன், அமெரிக்கா எங்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும்.

ஆப்கனில் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், அது எங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்னிச்சையான தாக்குதலாக அது இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காபூல் விமான நிலையத்தில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நடத்த இருந்தார். இதையடுத்து நாங்கள் தாக்குதல் நடத்தினோம். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என, அமெரிக்க ராணுவம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.