உலகம் செய்திகள்

அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்களுடன் தலிபான்கள் வெற்றிப் பேரணி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை கொண்டாட பிரமாண்ட பேரணி நடத்திய தலிபான்கள், அதில் அமெரிக்க ராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்ளை எடுத்துச் சென்றனர்.

ஆப்கானிஸ்தான் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்நிலையில் அதிபர் பைடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் எனக் கூறியிருந்தார்.

அதன்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டன.

வெளியேறுவதற்கு முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை செயலிழக்கச் செய்தனர்.

அதேசமயம் சில ஆயுதங்களை அப்படியே விட்டுச் சென்றதாக தெரிகிறது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை கொண்டாட காந்தஹாரில் தலிபான்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் அமெரிக்க ராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்ளை எடுத்துச் சென்றனர். மேலும் அமெரிக்க ராணுவத்திடம் இருந்து கைபற்றிய ஆயுதங்கள், சில வாகனங்கள் இந்த பேரணியில் இடம் பெற்றன.

பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் கந்தஹார் மீது பேரணியின் மீது பறந்து சென்றது. தலிபான்களுக்கு தகுதிவாய்ந்த விமானிகள் இல்லாததால் முன்னாள் ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அதனை ஓட்டிச் சென்றார்.