உலகம் செய்திகள்

இந்தியாவின் கோரிக்கையை வரவேற்ற தலிபான்

வாஷிங்டன் : இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையில் நியாயம் உள்ளதை தலிபான் ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயண மாக அமெரிக்கா சென்று உள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளிங்கன் உள்ளிட்டோருடன் பேசினார்.

இதைத் தொடர்ந்து ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் கத்தார் நாட்டிற்கான இந்திய துாதர் தீபக் மிட்டல், தலிபான் அரசியல் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானக்ஸ் உடன் பேச்சு நடத்தினார்.

அப்போது ‘இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு எதிரான பயங்கரவாaத நடவடிக்கைகளுக்கு ஆப்கனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என, தீபக் மிட்டல் தெரிவித்தார்.

மேலும் ஆப்கனில் உள்ள பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் சம உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப்போது இந்தியாவின் கவலையில் உள்ள நியாயம் கவனத்தில் கொள்ளப்படும் என ஷெர் முகமது தெரிவித்தார். அதனால் ஆப்கனில் தலிபான் என்ன செய்கிறது என்பதை விட, அங்கு பாக்., என்ன செய்கிறது என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் கூர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்தியா தலைமையில் நடந்து முடிந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ‘பாக்.,கில் செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது, லஷ்கர் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கன் இடமளிக்கக் கூடாது’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலிபானும், ‘பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க மாட்டோம்’ என, அமெரிக்காவுக்கு உறுதி அளித்து உள்ளது. அதன்படி தலிபான் அமைப்பினர் நடந்து கொள்கின்றனரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.