இந்தியா செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் காபூலில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்துக்குள் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதிலிருந்து தற்போது வரை 1,12,000 பேரை அமெரிக்கா பத்திரமாக மீட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இறுதிக் கட்ட மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் தான் கடந்த வியாழக்கிழமை காபூல் விமானநிலையத்துக்கு வெளியே பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. ஐஎஸ்ஐஎஸ் கோராசன் தீவிரவாத குழுவினர் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றனர். தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 13 பேர் உள்ளிட்ட 100 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து அமெரிக்கா நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் டாப் கமாண்டர்கள் எனப்படும் பெரும் புள்ளிகள் இறந்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

மேலும், விமான நிலையப் பகுதிக்கு அடுத்த அறிவிப்பு வரும்வரை யாரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது:

ஆப்கனில் இன்னும் நிலைமை அபாயகரமானதாக உள்ளது. காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க ராணுவம், அங்கு இன்னும் 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் மிகப்பெரிய தாக்குதல் நடக்கலாம் என எச்சரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் மேற்கத்திய படைகள் வரும் 31 ஆம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என தலிபான்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.